Sunday, July 21, 2013

உறவு


 


உறவை முறித்து வாழ்பவன்


உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழைய மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி), நூல்: புகாரி 5984

உறவினரின் உறவே அல்லாஹ்வின் உறவு


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் படைப்புகளைப் படைத்து முடித்த போது, உறவானது எழுந்து அன்பாளன் அல்லாஹ்வின் அரியாசனத்தின் கால்களில் ஒன்றைப் பற்றியது. அப்போது அல்லாஹ், ''என்ன?'' என்று கேட்டான். அதற்கு உறவு, ''உறவுகளைத் துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்பு கோரி நிற்கின்றேன்'' என்று கூறியது. ''உன்னை (உறவை) பேணி நல்ல முறையில் நடந்து கொள்பவருடன் நானும் நல்ல முறையில் நடந்து கொள்வேன் என்பதும் உன்னைத் துண்டித்து விடுகின்றவரை நானும் துண்டித்து விடுவேன் என்பதும் உனக்குத் திருப்தியளிக்கவில்லையா?'' என்று கேட்டான். அதற்கு உறவு, ''ஆம், என் இறைவா'' என்று கூறியது. அல்லாஹ், ''இது உனக்காக நடக்கும்'' என்று கூறினான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''நீங்கள் புறக்கணித்து பூமியில் குழப்பம் ஏற்படுத்தவும், உங்கள் உறவுகளை முறிக்கவும் முயல்வீர்களா?'' என்ற (47:22) வசனத்தை நீங்கள் விரும்பினால் ஓதிக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 5987

உறவு என்பது (இறையருளின்) ஒரு கிளையாகும். ஆகவே அதனுடன் யார் ஒட்டி வாழ்கின்றாரோ அவருடன் நானும் உறவு பாராட்டுவேன். அதை யார் முறித்துக் கொள்கின்றாரோ அவரை நானும் முறித்துக் கொள்வேன் என்று (அல்லாஹ் கூறியதாக) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் இதை அறிவிக்கின்றார்கள். (நூல்: புகாரி 5989)

உலகத்திலேயே கிடைக்கும் பலன்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
ஒருவர் செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் அல்லது தமது வாழ்நாள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று விரும்பினால் அவர் தமது உறவினர்களுடன் சேர்ந்து வாழட்டும்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி), நூல்: புகாரி 2067

.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
''(முற்காலத்தில்) மூன்று மனிதர்கள் நடந்து சென்றனர். அப்போது மழை பொழிந்தது. அவர்கள் மலையிலுள்ள குகையில் நுழைந்தனர். ஒரு பெரிய பாறை உருண்டு வந்து குகையின் வாசலை அடைத்தது. அப்போது அவர்கள், ''நீங்கள் செய்த நல்லறங்களில் மிகச் சிறந்ததைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்'' என்றனர்.
அவர்களில் ஒருவர், ''இறைவா! எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர். நான் ஆடு மேய்க்க வெளியே சென்று விட்டுப் பிறகு வந்து பால் கறந்து, பால் பாத்திரத்தைப் பெற்றோர்களிடம் கொண்டு வருவேன். அவர்கள் அருந்துவார்கள். பிறகு குழந்தைகளுக்கும் குடும்பத்தாருக்கும் என் மனைவிக்கும் கொடுப்பார்கள். ஓர் இரவு நான் தாமதமாக வந்தேன். பெற்றோர் உறங்கி விட்டனர். அவர்களை எழுப்புவதை நான் விரும்பவில்லை. குழந்தைகள் பசியால் என் காலடியில் அழுதனர். விடியும் வரை இதே நிலை நீடித்தது. இறைவா! நான் இதை உனது திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் நாங்கள் வானத்தைப் பார்க்கும் வகையில் ஓர் இடைவெளியை ஏற்படுத்து!'' என்று கூறினார்.
மற்றொருவர், ''இறைவா! எனது தந்தையின் உடன் பிறந்தாரின் மகளை எந்த ஆணும் எந்தப் பெண்ணையும் விரும்புவதை விட அதிகமாக விரும்பினேன் என்பதை நீ அறிவாய். அவள் தனக்கு நூறு தீனார் தரும் வரை தன்னை அடையக் கூடாது என்றாள். நான் உழைத்து நூறு தீனாரைத் திரட்டினேன். அவளது இரு கால்களுக்கிடையில் நான் அமர்ந்த போது, ''அல்லாஹ்வை அஞ்சிக் கொள்! உரிய முறையின்றி முத்திரையை உடைக்காதே!'' என்று அவள் கூறினாள். உடனே நான் அவளை விட்டு எழுந்து விட்டேன். இதை உனது திருப்தியை நாடி செய்திருப்பதாக நீ அறிந்தால் இந்தச் சிரமத்தை நீக்கு!'' என்று கூறினார். அல்லாஹ் அவர்களை விட்டும் மூன்றில் இரண்டு பங்கு நீக்கினான்.
மற்றொருவர், ''இறைவா! நான் மூன்று ஸாஉ (ஒருவகை அளவைப் பாத்திரம்) கேழ் வரகு கூலிக்கு ஒரு வேலையாளை அமர்த்தினேன். கூலியை நான் கொடுத்த போது அதை அவர் வாங்க மறுத்து விட்டார். அந்தக் கேழ்  வரகைப் பயிர் செய்தேன். அதன் வருமானத்தில் மாடுகளையும் அதை மேய்ப்பவரையும் விலைக்கு வாங்கினேன். பிறகு அவர் வந்து, ''அல்லாஹ்வின் அடிமையே! எனது கூலியைக் கொடு!'' என்று கூறினார். ''இந்த மாடுகள், அதை மேய்ப்பவர்கள் எல்லாம் உமக்குரியவை. எடுத்துச் செல்லும்'' என்று கூறினேன். அதற்கவர், ''என்னைக் கேலி செய்கின்றீரா?'' என்று கேட்டார். ''நான் உம்மைக் கேலி செய்யவில்லை. இவை உமக்குரியவை தான்'' எனக் கூறினேன். இறைவா! இதை நான் உனது திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் எங்களை விட்டு இந்தச் சிரமத்தை நீக்கு'' என்று கூறினார். சிரமம் முழுமையாக விலகியது.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 2215


அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தினரைக் கண்ணியப் படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் இரத்த பந்த உறவுகளைப் பேணி வாழட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் நல்லதைப் பேசட்டும், அல்லது வாய் மூடி இருக்கட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 6138

வலிந்து போய் உறவு பாராட்டுதல்


பதிலுக்குப் பதில் உறவாடுகின்றவர் (உண்மையில்) உறவைப் பேணியவர் அல்ல. மாறாக உறவு முறிந்தாலும் அந்த உறவுடன் இணைகின்றவரே உறவைப் பேணுபவர் ஆவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: புகாரி 5991

மிஞ்சினாலும் கெஞ்சிக் கொள்க!


''அல்லாஹ்வின் தூதரே! எனக்கு உறவினர்கள் உள்ளனர். அவர்களிடம் நான் உறவு பாராட்டுகின்றேன். அவர்களோ என்னிடம் பகைமை பாராட்டுகின்றனர். நான் உதவி செய்கின்றேன். அவர்கள் எனக்கு ஊறு விளைவிக்கின்றார்கள். அவர்களிடம் நான் பொறுமையை மேற்கொள்கின்றேன். அவர்கள் என்னிடம் அறிவீனத்தையே கடைப்பிடிக்கின்றார்கள்'' என்று ஒருவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''நீ சொல்வது போன்ற நிலையில் இருந்தால் நீ அவர்களை சூடான சாம்பலைத் திண்ணச் செய்தவன் போலாவாய். (அதாவது அவர்கள் தங்கள் மீது மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்கின்றனர்) இதே நிûயை நீ தொடர்கின்ற வரை அவர்களின் தீமையை விட்டு காப்பதற்காக ஓர் உதவியாளர் (வானவர்) உன்னுடன் இருந்து கொண்டே இருப்பார்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 4640, அஹ்மத் 7651

மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருக்கக் கூடாது


மூன்று நாட்களுக்கு மேல் தன்னுடைய சகோதரனை வெறுப்பது எந்த முஸ்லிமிற்கும் ஆகுமானதல்ல. அவர்கள் ஒருவரையொருவர் சந்தித்து (முகத்தை) திருப்பிக் கொள்கிறார்கள். அவ்விருவரில் முதலில் சலாத்தை ஆரம்பம் செய்பவரே சிறந்தவர்.
அறிவிப்பாளர்: அபூ அய்யூபில் அன்சாரி (ரலி)
நூல்: புகாரீ (6077)
அல்லாஹ்விடத்தில் (அருளுக்கு) மக்களில் தகுதியானவர் அவர்களில் முதலில் சலாத்தை ஆரம்பம் செய்பவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூ உமாமா (ரலி)
நூல்: அபூதாவூத் (4522)

அவதூறு கூறியவரையும் ஆதரித்த அபூபக்கர்(ரலி)என் தந்தை அபூபக்ர் ஸித்தீக் (ரலி)


 அவர்கள், ''அல்லாஹ்வின் மீதாணையாக! என் மகள் ஆயிஷா குறித்து அவதூறு கூறிய பின்பு ஒரு போதும் மிஸ்தஹுக்காக நான் சிறிதும் செலவிட மாட்டேன்'' என்று சத்தியமிட்டுக் கூறினார்கள்.  மிஸ்தஹ் பின் உஸாஸா, தமது உறவினர் என்பதாலும் அவர் ஏழை என்பதாலும் அவருக்காக அபூபக்ர் (ரலி) அவர்கள் செலவிட்டு வந்தார்கள்.
அப்போது அல்லாஹ், ''உங்களில் செல்வம் மற்றும் தயாள குணம் படைத்தோர் (தங்கள்) உறவினர்களுக்கோ, ஏழைகளுக்கோ, அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கோ (எதுவும்) கொடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம்.  (அவர்களால் தங்களுக்கு ஏதும் வருத்தம் ஏற்பட்டிருந்தால்) அவர்கள் அதனை மன்னித்து (பிழைகளைப்) பொருட்படுத்தாமல் விட்டு விடட்டும்.  அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனும் கிருபையுடையோ னுமாக இருக்கிறான்'' என்ற (24:22) வசனத்தை இறக்கினான்.
அபூபக்ர் (ரலி) அவர்கள், ''ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்'' என்று கூறிவிட்டு, மிஸ்தஹுக்கு ஏற்கனவே தாம் செலவிட்டு வந்ததைத் திரும்பவும் தொடரலானார்கள். ''அல்லாஹ்வின் மீதாணையாக! அவருக்குச் செய்யும் இந்த உதவியை நான் ஒரு போதும் நிறுத்த மாட்டேன்'' என்றும் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 2661

முதல் தர்மம் உறவினருக்கே


தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். ''நல்லவற்றி லிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும், அனாதைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும், நாடோடிகளுக்காகவும் (செலவிட வேண்டும்.) நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்'' எனக் கூறுவீராக! (அல் குர்ஆன் 2:215 )

நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் நின்றவர்களாக மக்களுக்கு உரையாற்றும் போது ''கொடுப்பவரின் கரம்தான் உயர்ந்ததாகும். உன்னுடைய குடும்பத்தவர்களாகிய உன்னுடைய தாய், உன்னுடைய தந்தை, உன்னுடைய சகோதரி, உன்னுடைய சகோதரன் பிறகு உனக்கு நெருக்கமானவர்கள் இவர்களிடமிருந்து நீ ஆரம்பம் செய்'' என்று கூறினார்கள்
அறிவிப்பவர்: தாரிக் (ரலி) நூல்: நஸயீ (2485)

அன்ஸாரிகளில் அபூதல்ஹா (ரலி) அதிக வசதி படைத்தவராக இருந்தார். அவருக்குப் பேரீச்ச மரங்கள் அதிகம் இருந்தன. அவரது செல்வங்களில் பைருஹா என்ற தோட்டமே அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. அது மஸ்ஜிது(ந்நபவி)க்கு எதிரில் இருந்தது. நபி (ஸல்) அவர்கள் அத்தோட்டத்திற்குள் சென்று அங்குள்ள நல்ல தண்ணீரைக் குடிப்பது வழக்கம்.
''நீங்கள் விரும்புவதை (நல்வழியில்) செலவிடாத வரை நன்மையை அடைந்து கொள்ளவே மாட்டீர்கள்'' எனும் (3:92) வசனம் இறங்கியதும், அபூதல்ஹா (ரலி), நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹு தஆலா 'நீங்கள் விரும்புவதை தர்மம் செய்யாத வரை நீங்கள் நன்மையைப் பெறவே மாட்டீர்கள்' என்று கூறுகின்றான். என் செல்வங்களில் நான் மிகவும் நேசிக்கும் பொருள் பைருஹா என்னும் தோட்டமேயாகும். அது அல்லாஹ்விற்காக ஆகட்டும். நான் அதன் மூலம் அல்லாஹ்விடம் நன்மையையும் அது (மறுமையின்) சேமிப்பாக இருக்க வேண்டுமென்றும் விரும்புகின்றேன். எனவே அதை அல்லாஹ் உங்களுக்குக் காட்டிய வழியில் பயன்படுத்திக் கொள்ளுங்கள், அல்லாஹ்வின் தூதரே!'' எனக் கூறினார். நபி (ஸல்) அவர்கள், ''ஆஹா! இது அதிக லாபம் தரக்கூடிய செல்வமாயிற்றே! இது அதிக லாபம் தரக்கூடிய செல்வமாயிற்றே! நீர் கூறியதை நான் நன்றாகவே செவியுற்று விட்டேன். நீர் அதை உமது நெருங்கிய உறவினர்களுக்குப் பங்கிட்டு விடுவதை நான் உசிதமாகக் கருதுகின்றேன்'' என்று கூறினார்கள். அதற்கு அபூதல்ஹா (ரலி), ''அல்லாஹ்வின் தூதரே! நான் அவ்வாறே செய்கின்றேன்'' என்று கூறி, அத்தோட்டத்தை தமது நெருங்கிய உறவினருக்கும் தமது தந்தையுடன் பிறந்தவரின் குழந்தைகளுக்கும் பங்கிட்டு விட்டார்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: புகாரி 1461, 2318, 2769, 4555, 5611



நான் ஓர் அடிமைப் பெண்ணை விடுதலை செய்தேன். ஆனால் நபி (ஸல்) அவர்களிடம் அதற்காக அனுமதி கேட்கவில்லை. என்னிடம் நபி (ஸல்) அவர்கள் தங்குகின்ற முறை வந்த போது, ''அல்லாஹ்வின் தூதரே! அடிமைப் பெண்ணை விடுதலை செய்து விட்டேனே! அறிவீர்களா?'' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''நீ (விடுதலை) செய்து விட்டாயா?'' என்று கேட்க, நான், ''ஆம்'' என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், ''நீ உன் தாயின் சகோதரர்களுக்கு (அன்பளிப்பாக) அவளைக் கொடுத்து விட்டிருந்தால் உனக்குப் பெரும் நற்பலன் கிடைத்திருக்கும்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அன்னை மைமூனா பின்த் ஹாரிஸ் (ரலி),  நூல்: புகாரி 2592


உறவினர்களின் துன்பங்களை அகற்றுவோம்


யார் ஒரு முஃமினை விட்டு உலக சோதனைகளில் ஏதேனும் ஒரு சோதனையை அகற்றி விடுகின்றாரோ அவருக்கு, கியாமத் நாளின் சோதனைகளிலிருந்து ஏதேனும் ஒரு சோதனையை அவரை விட்டும் அல்லாஹ் அகற்றி விடுகின்றான். யார் கஷ்டப்படுவோரின் கஷ்டத்தை எளிதாக்குகின்றாரோ அவருக்கு அல்லாஹ் இம்மை மறுமையின் கஷ்டத்தை எளிதாக்கி விடுகின்றான். ஓர் அடியான் தனது சகோதரனுக்கு உதவி செய்து கொண்டிருக்கும் வரை அல்லாஹ் அவனுக்கு உதவி செய்து கொண்டிருக்கின்றான். (ஹதீஸ் சுருக்கம்)
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 4867

 

கொள்கை உறவா? குருதி உறவா?

உறவினர்களை விட உயர்ந்த உத்தம நபி


''உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் உடன்பிறந்தாரும், உங்கள் வாழ்க்கைத் துணைவியரும், உங்களின் குடும்பத்தாரும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டத்திற்கு நீங்கள் அஞ்சுகிற வியாபாரமும், நீங்கள் விரும்புகிற வசிப்பிடங்களும் அல்லாஹ்வை விட, அவனது தூதரை விட, அவன் பாதையில் போரிடுவதை விட உங்களுக்கு அதிக விருப்பமான வையாக ஆகி விட்டால் அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை காத்திருங்கள்! குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான்'' என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 9:24)


இணைகற்பித்த உறவினர்களுக்கு பாவமன்னிப்பு தேடக்கூடாது


இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது.
(அல்குர்ஆன் 9:113)

''நூஹே! அவன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன். இது நல்ல செயல் அல்ல. உமக்கு அறிவு இல்லதாது பற்றி என்னிடம் கேட்காதீர்! அறியாதவராக நீர் இருக்கக் கூடாது என உமக்கு அறிவுரை கூறுகிறேன்'' என்று அவன் (அல்லாஹ்) கூறினான்.
(அல்குர்ஆன் 11:26)

நூஹுடைய மனைவியையும், லூத்துடைய மனைவியையும் (தன்னை) மறுப்போருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் காட்டுகிறான். அவ்விருவரும் நமது இரு நல்லடியார்களின் மனைவியராக இருந்தனர். அவர்களுக்குத் துரோகம் செய்தனர். எனவே அவ்விருவரையும் அல்லாஹ்விடமிருந்து அவர்கள் சிறிதளவும் காப்பாற்றவில்லை. ''இருவரும் நரகில் நுழைவோருடன் சேர்ந்து நுழையுங்கள்!'' என்று கூறப்பட்டது.
(அல்குர்ஆன் 66:10)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இப்ராஹீம் (அலை) அவர்கள் (தமது தந்தை) ஆஸரை மறுமை நாளில் சந்திப்பார்கள். ஆஸருடைய முகத்தில் கருமையும் புழுதியும் படிந்திருக்கும்.  அப்போது அவரிடம் இப்ராஹீம் (அலை) அவர்கள், ''நான் உங்களிடம் எனக்கு மாறு செய்ய வேண்டாம் என்று கூறவில்லையா?'' என்று கேட்பார்கள். அதற்கு அவர், ''இன்று உனக்கு நான் மாறு செய்ய மாட்டேன்'' என்று கூறுவார்.  அப்போது இப்ராஹீம் (அலை) அவர்கள், ''இறைவா! மக்களுக்கு உயிர் கொடுத்து எழுப்பப்படும் மறுமை நாளில் என்னை இழிவு படுத்த மாட்டாய் என்று நீ எனக்கு வாக்களித்திருந்தாய்.  வெகு தொலைவிலிருக்கும் என் தந்தையை விட வேறெது அதிகம் இழிவு தரக்கூடியது?'' என்று கேட்பார்கள்.  அப்போது உயர்வான அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களிடம், ''நான் சொர்க்கத்தை இறை மறுப்பாளர்களுக்குத் தடை செய்து விட்டேன்'' என்று பதிலளிப்பான்.  பிறகு, ''இப்ராஹீமே! உமது கால்களுக்குக் கீழே என்ன இருக்கின்றது என்று பார்ப்பீராக!'' என்று கூறப்படும்.  அப்போது அங்கே இரத்தத்தில் தோய்ந்த முடிகள் நிறைந்த கழுதைப் புலி ஒன்று கிடக்கும்.  பின்னர் அதன் கால்களைப் பிடித்துத் தூக்கப்பட்டு நரகத்தில் அது போடப்படும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 3350

 

 

அண்டை வீட்டாரின் உரிமைகள்

அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதை களுக்கும், ஏழைகளுக்கும், உறவினரான அண்டை வீட்டாருக்கும், உறவினரல்லாத அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்! பெருமையடித்து, கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 4:36)

மூன்று வகை அண்டை வீட்டார்

''அண்டை வீட்டார் மூன்று வகைப்படுவர். 1. ஒரேயொரு உரிமையுள்ள அண்டை வீட்டார். இவர் முஸ்லிமல்லாத அண்டை வீட்டார். அவருக்கு அண்டை வீட்டார் என்று உரிமை மட்டும் உள்ளது. 2. இரண்டு உரிமைகள் உள்ள அண்டை வீட்டார். இவர் முஸ்லிமான அண்டை வீட்டார். இவருக்கு அண்டை வீட்டார் உரிமையும், இஸ்லாமிய மார்க்க உரிமையும் உண்டு. 3. மூன்று உரிமைகள் உள்ள அண்டை வீட்டார். இவர் முஸ்லிமாகவும் உறவினராகவும் உள்ளவர். இவருக்கு அண்டை வீட்டடார் என்ற உரிமையும் இஸ்லாமிய மார்க்க உரிமையும் உறவுக்காரர் என்ற உரிமையும் உண்டு'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: தப்ரானீ அவர்களுக்குரிய முஸ்னதுஷ் ஷாமியீன்,
பாகம்: 7, பக்கம்: 185)

கண்ணியப்படுத்துங்கள்!

''அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாரை கண்ணியப் படுத்தட்டும்!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரீ (6019)

இறைவனின் அன்புக்கு அழகிய வழி

''அல்லாஹ்வும் அவன் தூதரும் விரும்புவது யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர், தம் அண்டை வீட்டாரிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளட்டும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின்  அபீ குராத் (ரலி)
நூல்கள்: ஷுஅபுல் ஈமான்லிபைஹகீ (1502), ஹக்குல் ஜார், பக்கம்: 6.

நபிகளாரின் இறுதி அறிவுரை

நபி (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜின் போது ''நான் அண்டை வீட்டாரிடம் நல்ல முறையில்      நடந்து கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன்'' என்று அதிகமாகக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)
நூல்: அல்முஃஜமுல் கபீர்லிதப்ரானீ, பாகம்: 8, பக்கம்: 111

யார் முஸ்லிம்?

''உன் பக்கத்தில் இருக்கும் அண்டை வீட்டாருக்கு நன்மை செய்! நீ முஸ்லிமாவாய்'' என்று நபிகளார் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: இப்னுமாஜா (4207)

உதவுங்கள்

''அண்டை வீட்டார் குறித்து என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் அறிவுறுத்திக் கொண்டேயிருந்தார். எந்த அளவிற்கென்றால், (எங்கே) அண்டை வீட்டாரை எனக்கு வாரிசாக்கி விடுவாரோ என்று கூட நான் எண்ணினேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரீ (6014)

குழம்பில் தண்ணீரை அதிகப்படுத்துங்கள்

அண்டை வீட்டார் இருக்கிறார்கள் என்ற எண்ணம் நம்மிடம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கட்டும். நாம் நல்ல பொருள்களை சமைக்கும் போது அவர்களுக்கும் வழங்க வேண்டும். குறைவாக நாம் குழம்பு வைத்தாலும் அதில் கொஞ்சம் தண்ணீரைச் சேர்த்து அவர்களுக்கும் வழங்க வேண்டும்.
''அபூதரே! நீ குழம்பு வைத்தால் அதில் தண்ணீரை அதிகப்படுத்து! உன் பக்கத்து வீட்டாரை (அதைக் கொடுத்து) கவனித்துக் கொள்!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
நூல்: முஸ்லிம் (4758)

அற்பமானது என்று கொடுக்காமல் இருந்து விடாதீர்!

நாம் அண்டை வீட்டாருக்கு வழங்கும் பொருள் தரம் உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்பது நிபந்தனையில்லை. சாதாரண பொருளாக இருந்தாலும் அதை வழங்க வேண்டும். கொடுப்பவரும் வாங்குபவரும் அதை அற்பமாகக் கருதக் கூடாது.
''முஸ்லிம் பெண்களே! ஓர் அண்டை வீட்டுக்காரிக்கு ஓர் ஆட்டின் குளம்பை (அன்பளிப்பாகக்) கொடுத்தாலும் அதை(க் கொடுப்பதையும் பெறுவதையும் அவர்கள்) இழிவாகக் கருத வேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரீ (2566)

அன்பளிப்புச் செய்வதில் முதலிடம்

ஒருவருக்கு மட்டுமே அன்பளிப்புச் செய்ய முடியும், குறைவான பொருட்களே இருக்கின்றன என்றால் அண்டை வீட்டாரில் நம் வீட்டு வாசலுக்கு யார் பக்கத்தில் இருக்கிறாரோ அவருக்கு வழங்க வேண்டும்.
''அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இரண்டு அண்டை வீட்டார் உள்ளனர். அவர்களில் யாருக்கு நான் அன்பளிப்புச் செய்வது?'' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''இருவரில் யார் வீட்டு வாசல் உனக்கு நெருக்கமாக இருக்கிறதோ அவருக்கு'' என்றார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரீ (2259)

சிறந்ததைத் தேர்வு செய்யுங்கள்

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையான வற்றையும், பூமியிலிருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தியதிலிருந்தும் (நல் வழியில்) செலவிடுங்கள்! கண்ணை மூடிக் கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள்! அல்லாஹ் தேவையற்றவன்; புகழுக்குரியவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (அல்குர்ஆன் 2: 267)
''எனது உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! தமக்கு விரும்பியதை தன் அண்டை வீட்டாருக்கு அல்லது தன் சகோதரனுக்கு விரும்பாத வரை ஒரு அடியான் (உண்மையான) நம்பிக்கை கொண்டவனாக மாட்டான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் (71)

தான் மட்டும் வயிறார சப்பிட மாட்டான்

''தன் அண்டை வீட்டாரை விட்டு தான் (மட்டும்) வயிறு நிரம்ப ஒருவன் சாப்பிட மாட்டான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உமர் (ரலி)
நூல்: அஹ்மத் (367)
'முஸ்னத் அபூயஃலா' என்ற ஹதீஸ் நூலில் அண்டை வீட்டார் பசியோடு இருக்கும் போது வயிறார சாப்பிடுபவன் முஃமின் அல்லன்! என்று நபிகளார் கூறியதாக இடம் பெற்றுள்ளது.

மரப் பலகை அடித்தல்

''ஒருவர் தன் (வீட்டுச்) சுவரில் தன் அண்டை வீட்டுக்காரர் மரக்கட்டை பதிப்பதைத் தடுக்க வேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூஹுரைரா (ரலி) சொல்லி விட்டு ''என்ன இது! உங்களை இதை (நபிகளாரின் கட்டளையைப்) புறக்கணிப்பவர்களாக நான் பார்க்கின்றேனே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இந்த நபி வாக்கைத் தொடர்ந்து எடுத்துச் சொல்லிக் கொண்டேயிருப்பேன்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அல்அஃரஜ்
நூல்: புகாரீ (2463)

வீட்டை விற்றல்

நான் ஸஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களிடம் தங்கியிருந்தேன். அப்போது மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் வந்து, தமது கையை எனது தோள் புஜங்களில் ஒன்றில் வைத்தார்கள். அப்போது (அடிமையாயிருந்து) நபி (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அபூராஃபிவு (ரலி) அவர்கள் வந்து ''ஸஅதே! உமது வீட்டிலுள்ள எனக்குச் சொந்தமான இரண்டு அறைகளை என்னிடமிருந்து வாங்கிக் கொள்வீராக!'' எனக் கூறினார்கள். அதற்க ஸஅத் (ரலி) அவர்கள் ''அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவற்றை நான் வாங்க மாட்டேன்'' என்றார்கள். அருகிலிருந்த மிஸ்வர் (ரலி) அவர்கள், ஸஅத் (ரலி) அவர்களிடம் ''அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீர் வாங்கிக் கொள்ளத் தான் வேண்டும்'' என்றார்கள். அப்போது ஸஅத் (ரலி) அவர்கள், ''அல்லாஹ்வின் மீது ஆணையாக! தவணை அடிப்டையில் நாலாயிரம் வெள்ளிக் காசைத் தவிர உமக்கு அதிகமாகத் தர மாட்டேன்'' என்று கூறினார்கள். அதற்கு அபூராஃபிவு (ரலி) அவர்கள் ''ஐநூறு தங்கக் காசுகளுக்கு அது கேட்கப்பட்டுள்ளது. ''அண்டை வீட்டில் இருப்பவர் அண்மையில் இருப்பதால் அவரே அதிகம் உரிமை படைத்தவர்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுறாவிட்டால் ஐநூறு தங்கக் காசுக்குக் கேட்கப்பட்டதை நாலாயிரம் வெள்ளிக் காசுக்கு உமக்கு விற்க மாட்டேன்' என்று கூறி விட்டு ஸஅதுக்கே விற்றார்.
அறிவிப்பவர்: அம்ர் பின் ஷரீத்
நூல்: புகாரீ (2258)

தொல்லை தருதல்

''அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியவர் தன் அண்டை வீட்டாருக்குத் தொந்தரவு தரவேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரீ (5187)

''அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன்'' என்று (மூன்று முறை) நபி (ஸல்) அவர்கள கூறினார்கள். ''அவன் யார்? அல்லாஹ்வின் தூதரே!'' என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''எவனுடைய நாசவேலைகளிலிருந்து அவனுடைய அண்டை வீட்டார் பாதுகாப்பு உணர்வைப் பெறவில்லையோ அவன்தான்'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஷுரைஹ் (ரலி), நூல்: புகாரீ (6016)

எவனுடைய நாசவேலைகளிலிருந்து அண்டைவீட்டார் பாதுகாப்பு பெறவில்லை அவர் சுவர்க்கம் செல்லமுடியாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் (73)

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ஒரு பெண்மணி அதிகம் தொழுகை, நோன்பு, தர்மம் செய்பவளாக கருதப்படுகிறாள் ஆனால் அவள் அண்டைவீட்டாருக்கு தன் நாவால் தொல்லை தருகிறாள். (இவளைப் பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?) என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'இவள் நரகில் இருப்பாள்' என்றார்கள். இன்னொரு பெண்மணி குறைந்த நோன்பு, தர்மம், தொழுகை உடையவளாக இருக்கிறாள் என்று கருதப்படுகிறாள். அவள் தர்மம் செய்தால் வெண்ணைத் துண்டுகளைத்தான் தர்மம் செய்வாள். ஆனால் அவள் அண்டை வீட்டாருக்கு நாவால் தொல்லை தருவதில்லை. (இவளைப் பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?) என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இவள் சுவர்க்கத்தில் இருப்பாள் என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: அஹ்மத் (9298)

ஒரு அடியானின் ஈமான் சரியாகாது, அவனுடைய உள்ளம் சரியாகும் வரை. அவனுடைய உள்ளம் சரியாகாது அவனுடைய நாவு சீராகும் வரை. யாருடை அண்டைவீட்டார் அவனின் நாசவேலையிலிருந்து பாதுகாப்புபெறவில்லையோ அந்த மனிதன் சுவர்க்கம் போக முடியாது என்று நபிகளார் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: அஹ்மத் (12575)

மாபெரும் குற்றம்

நான் நபி (ஸல்) அவர்களிடம் ''அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப்பெரியது எது?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ''அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க அவனுக்கு நீ இணைகற்பிப்பது'' என்று சொன்னார்கள். நான், ''நிச்சயமாக அது மிகப் பெரிய குற்றம்தான்'' என்று சொல்லிவிட்டு ''பிறகு எது?'' என்று கேட்டேன். ''உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குப்போட்டு) உண்ணும் என அஞ்சி அதனை நீ கொல்வது'' என்று சொன்னார்கள். நான், ''பிறகு எது?'' என்று கேட்க, அவர்கள், ''உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபச்சாரம் செய்வது'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி), நூல்: புகாரீ (4477)

நீங்கள் விபச்சாரத்தைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்? என்று தம் தோழர்களிடம் நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வும் அவன் தூதரும் தடைசெய்த ஒன்றாகும். இது மறுமைநாள்வரை ஹராமாகும் என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம்'' ஒருவன் பக்கத்து வீட்டு ஒரு பெண்ணிடம் விபச்சாரம் செய்வதை விட (மற்ற) பத்துபெண்களிடம் விபச்சாரம் செய்வது (தண்டனையில்) லேசானதாகும்'' என்று கூறினார்கள். திருட்டைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, 'அதை அல்லாஹ்வும் அவன் தூதரும் தடைசெய்துள்ளார்கள். எனவே அது ஹராமாகும்' என்று பதிலளித்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,ஒருவன் பக்கத்து வீட்டில் திருடுவதை விட (மற்ற) பத்து வீட்டில் திருடுவது (தண்டனையில்) லேசானதாகும்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அல்மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி), நூல்: அஹ்மத் (22734)

மறுமையில் முறையிடுவான்

தன் அண்டைவீட்டாருடன் தொடர்புள்ள எத்தனையோ பேர், அல்லாஹ்விடம் என் இறைவா! இவன் என்னை (வீட்டுக்குள்) விடாமல் கதவை தாளிட்டுக் கொண்டான், நல்லதை (எனக்கு தராமல்) தடுத்தான் என்று மறுமைநாளில் கூறுவான்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: அதபுல் முஃப்ரத் (111)

நன்மையான காரியங்களில் கூட்டாக செயல்படுங்கள்

நானும் அன்சாரித் தோழர்களில் ஒருவரான எனது அண்டை வீட்டுக்காரரும், உமைய்யா பின் ஜைத் என்பாரின் சந்ததிகள் வசித்து வந்த இடத்தில் வாழ்ந்து வந்தோம். அது மதீனாவின் உயரமான இடங்களில் ஒன்றாகும். நபி (ஸல்) அவர்களுடைய அவைக்கு நாங்கள் முறைவûத்துச் சென்று வந்தோம். ஒரு நாள் அவர் செல்வார். ஒரு நாள் நான் செல்வேன்.
அறிவிப்பவர்: உமர் (ரலி), நூல்: புகாரீ (89)

அல்லாஹ்விடம் சிறந்தவர்

நண்பர்களில் அல்லாஹ்விடம் சிறந்தவர் தம் நண்பர்களிடம் சிறந்தவர்களாக இருப்பவர்களே! பக்கத்து வீட்டாரில் அல்லாஹ்விடம் சிறந்தவர், தம் பக்கது வீட்டாரிடம் சிறந்தவராக இருப்பவரே! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் :அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: திர்மிதீ (1867)

நல்ல அண்டைவீட்டார்

நல்ல அண்டைவீட்டார் அமைவது, நல்ல வாகனம் கிடைப்பது, விசாலமான வீடு இருப்பதும் ஒரு மனிதனின் நற்பேறில் உள்ளதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: அஹ்மத் (14830)

தொல்லையை பொறுத்துக் கொள்ளுங்கள்

ஒரு மனிதனுக்கு தொல்லை தரும் அண்டைவீட்டார் இருக்கிறார்கள். அவரோ அவரின் தொல்லைகளை பொறுத்துக் கொண்டால் அல்லாஹ் அவரின் வாழ்வு, சாவுக்கு போதுமானவானாக இருப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: ஹாகிம் 2446)

No comments:

Post a Comment